Sunday, April 12, 2009
காவலரண் மீது காவலிருக்கின்ற ஆசை மகளே!
’நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்; ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்’’ எனும் மகாகவி பாரதியாரின் புதுமைப் பெண் கனவு ஈழத்தில் நனவாகத் தொடங்கியது 1984ம் ஆண்டினைத் தொடர்ந்தே என்று கூறலாம். ஆரம்ப காலத்தில் பெண்கள் எதிர்த்துப் பேசுவதே தவறு என்று கூறிப் பெண்களின் கருத்துச் சுதந்திரத்தை முடக்கி வைத்திருந்த தமிழ்ச் சமூகம் பெண்களுக்கென்ற தனி அங்கீகாரத்தை வழங்கியது 1984களின் பிற்பகுதியினைத் தொடர்ந்தே என்று கூறலாம்.
வீட்டுக்கு விலக்கு என்று பெண்களை வெளியே போக விடாது தள்ளி வைப்பதும், மாலையாகியதும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்று வரையறைகளைப் போட்டுப் பெண்ணை ஒரு பிள்ளை பெறும் இயந்திரமாகவும், சமையல் செய்கின்ற இல்லாளாகவும் கருதத் தொடங்கிய எமது சமூக அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கிய காலப் பகுதி விடுதலைப் புலிகள் அமைப்பு எழுச்சி பெறத் தொடங்கிய ஆரம்ப காலப் பகுதி என்றே கூறலாம்.
1993களில் வன்னிப் பெரு நிலப்பரப்பும், யாழ்ப்பாணமும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது பெண்களின் சுதந்திரம் எவ்வாறு இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக ‘ஒரு பெண் நள்ளிரவு நேரத்தில் எந்தவிதத் துணையுமின்றித் தனியே யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு நடந்து செல்லலாம்’ என்று கூறிக் கொள்வார்கள். அந்தளவிற்கு அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வந்த பெண்ணினம் வீறு கொண்டெழுந்தார்கள் எங்கள் ஈழ தேசத்தில் என்று கூறலாம். இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவடைந்த முதற் பெண் மாவீரர் லெப்டினண்ட் மாலதி அவர்களின் நினைவு நாளான அக்டோபர் பத்தாம் திகதியே தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படுகின்றமையும் நினைவில் கொள்ளத்தக்கது.
‘பள்ளியறைகளில் புள்ளி மயிலெனத் துள்ளிச் சிரித்தது போதும்- நீங்கள்
அள்ளிச் சொருகிய மெல்ல நடந்திடும் கொள்ளை அழகுகள் போதும்
கண்களில் தீயினை மூட்டுங்கள்!
உங்கள் கால்களில் வேகங்கள் பூட்டுங்கள்!
எனும் கூற்றினைச் செயல் வடிவம் பெற செய்யும் வகையில் எங்கள் பெண்கள் போராளிகளாகக் களமாடத் தொடங்கினார்கள். 1985 ஆண்டு ஆவணி மாதம் பெண் புலிகளின் முதலாவது பயிற்சி முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் கள முனைகளில் ஆண் போராளிகளுடன் சேர்ந்து நின்று சண்டை செய்த பெண் போராளிகள் பின்னர் தனித்து நின்று சமர் செய்வதிலும், படைத் துறைக் கருவிகளைக் கையாள்வதிலும் தேரச்சி பெறத் தொடங்கினார்கள்.
பெண் புலிகளின், மகளிர் படையணியின் ஒப்பற்ற வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்ற தளபதிகளுள் ஒருவர் தான் பிரிகேடியர் பால்ராஜ். பெண் போராளிகளின் ஒப்பற்ற தாக்குதல் திறன் பிரயோகிக்கப்பட்ட முதலாவது சமராக 1993களில் இடம்பெற்ற மணலாறு இராணுவ முகாம் மீதான தாக்குதலைக் குறிப்பிடலாம். இந்தத் தாக்குதல் பெரு வெற்றியினைப் புலிகளுக்குப் பெற்றுத் தராவிட்டாலும் இந்தத் தாக்குதலில் பெண் பேராளிகளின் பங்களிப்பு அதிகளவே என்று கூறலாம்.
புலிகள் மணலாறு முகாமைத் தாக்கப் போகிறார்கள் என்பதை துரோகிகள் மூலம் முன் கூட்டியே அறிந்து கொண்ட இராணுவத்தினர் முகாமிற்குள் குறிப்பிட்ட ஒரு சிறிய தொகை இராணுவத்தினரை மட்டும் நிறுத்தி விட்டு, ஏனைய இராணுவத்தினரை முகாமினைச் சுற்றி பின்னகர்த்தியிருந்தார்கள். இராணுவத்தினர் எல்லோரும் இறந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது இராணுவத்தின் எதிர்த் தாக்குதல் குறைவாக உள்ளது என்று வீராவேசத்துடன் சண்டையிட்ட போராளிகளை இராணுவத்தினர் பின் புறமிருந்து வந்து சுற்றி வளைத்துத் தாக்கத் தொடங்கினார்கள். இதனால் போராளிகளுக்கு இத் தாக்குதலில் பலத்த உயிரழப்புக்கள் ஏற்பட்டன என்றே கூறலாம்.
இது தவிர இந்தச் சமர்க்களத்திலும் வழமை போலவே இராணுவம் தன் பேரினவாதப் புத்தியைக் காட்டத் தொடங்கியது என்றே கூறலாம். பெண் போராளிகளின் உடல் உறுப்புக்களைக் கண்டம் துண்டமாக வெட்டிப் பொதி செய்து அனுப்பித் தங்களின் வக்கிர புத்தியினையும் படையினர் இந்தச் சமர்க்களத்தில் காட்டியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண் போராளிகளின் அதீத தாக்குதல் திறமை வெளிப்படுத்தப்பட்ட சமர்களாக ஓயாத அலைகள் மூன்று வெற்றிச் சமரின் போது இடம்பெற்ற மன்னகுளம் இராணுவ முகாம் மீதான தாக்குதலையும், தீச்சுவாலை முறியடிப்புச் சமர்களையும் குறிப்பிடலாம்.
என்னுடைய சிறு வயதில் இந்த அக்காமாருடன் பழகும் வாய்ப்பும் எனக்கும் கிடைத்தது. நான் சிறு வயதில் அப்பாவின் காசினை எடுத்து பாடசாலை விடுமுறை நாட்களின் போது ஒரு சின்னப் பெட்டிக் கடையினைப் போடும் முயற்சிகளில் ஈடுபடுவேன். அப்போது பக்கத்தில் இருக்கும் பெரிய கடைக்குச் சென்று அங்குள்ள இனிப்பு வகைகளை வாங்கி வந்து என்னுடைய குட்டிக் கடையில் வைத்து விற்பேன். எங்கள் வீட்டிற்கு வரும் ‘மதீனா அக்கா, குட்டி அக்கா, நிலா அக்கா முதலியோர் ‘பொடியன் பாவம் என்ற நோக்கத்தில்’ என் கடையில் உள்ள பொருட்களை விலை கொடுத்து வாங்கிச் செல்வார்கள்.
பெண் போராளிகளிடையே பல சிந்தனைக் கருத்துக்களை விதைத்து, அவர்களுடன் இருந்து பல வேலைத் திட்டங்களைச் செயற்படுத்திய பெருமை திருமதி அடேல் பாலசிங்கம் அம்மையாரையே (அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார்) சாரும். எம்மவர்கள் தடக்கித் தடக்கித் தமிழைத் ‘தமிலாகப் பேசுவதை விட’ ஒரு வெள்ளை இனப் பெண்மணியாக இருந்தும் தமிழைப் பிறழ்வின்றிப் பேசும் அவரின் தனித்துவத் திறமையும் பெண் போராளிகளை ஊக்கப்படுத்தும் அவரின் நல்லெண்ணமும் அபாரமானது என்றே கூறலாம்.
அடுத்துப் பெண் போராளிகளின் தாக்குதல்களை நெறிப்படுத்தி மாலதி படையணியை வழி நடத்தும் பெருமை கேணல் விதுசா என்றழைக்கப்படும் யாழினியையே சாரும். விதுசா அக்கா படை நடத்தும் பாங்கே தனித்துவமானது என்று கூறலாம். அவர் வழங்கும் கட்டளைகளைக் கேட்டவர்களுக்கு அவரின் படை நடத்தும் சாதுரியம் புரியும். ‘அடியே என்ன செய்யுறீங்கள் நீங்கள்?? பொடியங்கள் நல்லா அடிச்சு நிறைய ஆயுதம் எல்லாம் எடுத்துக் கொண்டு முன்னேறுகிறாங்கள், நீங்கள் என்ன செய்யுறீங்கள், அவங்கள் இப்ப நிறைய ஆமியின்ரை பொடி எல்லாம் எடுத்திருக்கிறாங்களாம், படபடவென்று அடியுங்கோ பாப்பம், இந்தச் சண்டையிலை பொடியங்களை விட நாங்கள் நல்லாச் செய்ய வேணும் என்று போராளிகளை உற்சாகமூட்டிச் சண்டையை வழி நடத்துவார்.
விதுசா அக்காவுடன் பேசும் போது ஏதாவது நக்கல் கதைகள் சொன்னால் போதும். முகத்தை ஒரு சுழிப்புச் சுழித்துப் போட்டு ஒரு பார்வை பார்ப்பா. அந்தப் பார்வையே தலையிலை அடிப்பது போன்று இருக்கும். இன்று விதுசா அக்கா பற்றி வரும் செய்திகளைக் கேட்கும் போது உள்ளம் கலங்குகிறது. ஆனாலும் அவை எவற்றையும் இன்னமும் முற்று முழுதாக உறுதிப்படுத்தவும் முடியாதுள்ளது.
தீராத ஓர்மத்துடனும், மன வலிமையுடனும், இலட்சிய வேள்வி வேண்டிச் சண்டை செய்யும் ஒப்பற்ற பெண் புலிகளின் திறமைக்கு உலகத்தில் வேறேதும் நிகர் இல்லை என்றே கூறலாம். காலம் என்றோ ஒரு நாள் இந்தக் கரிகாலன் புதல்வர்களின் கூற்றுக்குச் செவிசாய்க்கும் என்பதில் ஐயமில்லை.
பெண் புலிகளைத் தன்னுடைய மகள்களாக நினைத்துக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதிய பாடல் ஒன்றினை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைகின்றேன்.
பாடலினைக் கேட்டபடி பாடல் வரியினைப் படித்துப் பாருங்கள்!
|
பாடல்: காவலரண் மீது காவலிருக்கின்ற ஆசை மகளே..!
பாடல் இடம்பெற்ற இறுவட்டு: வெஞ்சமரின் வரிகள்
பாடல் வரிகள்: கவிஞர் புதுவை இரத்தினதுரை
பாடலைப் பாடியவர்: நிரோஜன்
பாடலுக்கு இசை: தமிழீழ மகளிர் இசைக் குழு
‘காவலரண் மீது காவலிருக்கின்ற ஆசை மகளே, என் மகளே- இந்தப்
பாச உறவிங்கு பாடும் குரல் வந்து காதில் விழுமா?
என் மகளே? காதில் விழுமா என் மகளே?
சாமம் கழிகின்ற நேரம் உன் காவலரண் கூட ஈரம்
பாயும் இருக்காது மகளே படுக்க முடியாது!
(காவலரண் மீது காவலிருக்கின்ற...)
சாகும் வயதான போதும் எனக்குள்ளே
சாகப் பயம் இன்னும் மகளே, சாகப் பயம் இன்னும் மகளே- நீ
பாயும் புலியாகி காவலரண் மீது
காவலிருக்கின்றாய் மகளே, காவலிருக்கின்றாய் மகளே!
நெஞ்சின் ஓரத்தில் நெருப்பு- உன்
நிமிர்ந்த வாழ்வெண்ணிச் செருக்கு
பிஞ்சில் மண் காக்கும் பொறுப்பு
உனைப் பார்க்க வர இன்று விருப்பு!
(காவலரண் மீது காவலிருக்கின்ற...)
முந்தி இரவென்ன பகலும் தனியாகப் போகத் துணை தேடும் மகளே
போகத் துணை தேடும் மகளே-இன்று
குண்டு மழைக்குள்ளே நின்று பகை தன்னை
வென்று வருகின்றாய் மகளே, வென்று வருகின்றாய் மகளே!
தலைவன் தந்தானே வீரம்,
அதைத் தாங்கி மண்ணிற்கும் நேரம்
கவலை எனக்கில்லை மகளே
உனைக் காணவரலாமா மகளே???
(காவலரண் மீது காவலிருக்கின்ற...)
உன்னை மகளாகப் பெற்ற மகிழ்வோடு உயிரை விட வேண்டும் மகளே,
உயிரை விட வேண்டும் மகளே- என்
பெண்ணும் நிமிர்ந்தின்று போரில் விளையாடும் பெருமையது போதும் மகளே,
பெருமையது போதும் மகளே!
நிலவு தலை வாரும் சாமம்- உன்
நினைவில் உறவாடும் நேசம்
அழகு பூச்சூடும் அழகே- பகை
அடித்து விளையாடு மகளே!
(காவலரண் மீது காவலிருக்கின்ற...)
இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....
*என்னுடைய அம்மம்மா.......!



22 comments:
பெண்களைப்பற்றிய உண்மையான ஆழ்மான பதிவு..
பாடலை கேட்க முடியாது..ஆனால் வாசித்தேன்..
//முந்தி இரவென்ன பகலும் தனியாகப் போகத் துணை தேடும் மகளே
போகத் துணை தேடும் மகளே-இன்று
குண்டு மழைக்குள்ளே நின்று பகை தன்னை
வென்று வருகின்றாய் மகளே, வென்று வருகின்றாய் மகளே!//
என்னை கவர்ந்த வரிகள்
பள்ளியறைகளில் புள்ளி மயிலெனத் துள்ளிச் சிரித்தது போதும்- நீங்கள்
அள்ளிச் சொருகிய மெல்ல நடந்திடும் கொள்ளை அழகுகள் போதும்
கண்களில் தீயினை மூட்டுங்கள், உங்கள் கால்களில் வேகங்கள் பூட்டுங்கள்!//
எனது பாடசாலைக் காலங்களில் ஏதேனும் நிகழ்வுகளில் அடிக்கடி நான் பாடும் பாடல் இது. எனது கட்டைக்குரல் சரியாக பொருந்துவதாக அப்போது சொல்வார்கள்.
...
மகளீர் படையணியின் வளர்ச்சியும் எழுச்சியுமே யாழ்மண்ணில் பல பெண்களை வெளியுலகிற்குக் கொண்டு வந்தது.
1990 காலப்பகுதியில் எங்கள் யாழ்ப்பாணத்துக் கிடுகுவேலிக் கண்களுக்கு புதுமையானவர்களாய் பெண்புலிகள் வாகனங்களை கையாள்வது முதல் சகல துறைகளிலும் தடம் பதித்துத் திறமை மிக்க பல பெண்களை உருவாக்கியது.
அந்தப்போராளிப் பெண்கள் பின்னர் களங்களையே வழிநடாத்தும் தளபதிகளாகி உலகே வியக்கும் வண்ணம் உயர்ந்த நெருப்புகள்.
சாந்தி
Anonymous சயந்தன் said...
எனது பாடசாலைக் காலங்களில் ஏதேனும் நிகழ்வுகளில் அடிக்கடி நான் பாடும் பாடல் இது. எனது கட்டைக்குரல் சரியாக பொருந்துவதாக அப்போது சொல்வார்கள். """"
சொல்லவேயில்லை சயந்தன்..!!!
//நிலவு தலை வாரும் சாமம்- உன்
நினைவில் உறவாடும் நேசம்
அழகு பூச்சூடும் அழகே- பகை
அடித்து விளையாடு மகளே!//
அருமையான வரிகள் கமல்
எங்கள் வீரப் பெண்களின் படை நகர்த்தல் கண்டு எத்தனையோ முறைகள் அதிசயித்திருக்கிறேன்.என்னால் முடியாமல் போனதை நினைத்து ஆதங்கமும்கூட.
காலத்துக்கு தேவையான புத்தூட்டல். அருமை கமல்... இப்படியான உங்கள் வரிகள் தான் தன்னம்பிக்கையையும், நானும் அப்படியே வேற வேண்டும் என்ற புத்துணர்வையும் வளரும் தலைமுறையிடம் விதைக்கும். வரும் ஆண்டிலும் இப்படியே தொடருங்கள் நண்பரே...
இப்பதிவு மண்ணை விட்டு சுவர்க்கம் புகுந்த பெண் போராளிகளுக்கு சமர்ப்பணமாக இருக்கும்... பெண்கள் எதற்கும் சலைத்தவர்களல்ல என்பது தெரிந்த விசயம்./. போராளிகளாக இருப்பதிலும்தான்!!!
டெல்லியின் ரஷியா பேகத்தை நீங்கள் கூறிய அத்தனை பெண் போராளிகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். ஒருவகையில் இருவரும் ஒன்றுதான். நாட்டைக் காக்கத்தான் போரிடுகிறார்கள்... நம்மடது மட்டும் சின்ன வித்தியாசம்.. !!
எனக்கு ஈழத்தகவல்களை இந்த அளவுக்கு ஆழ்ந்து தந்தவர்கள் எவருமில்லை.. உங்களைத் தவிர்த்து!!
பாராட்டுக்கள்!!
பாடல் வரிகள் நல்லா இருக்கேன்னு திருப்பிப் பார்த்தா.... நம்ம இரத்தனதுரை அவர்கள் எழுதியிருக்காரு!!!...
((கமல்ல்... வேலை நமக்கு முக்கியம்.. நீங்க ஃப்ரீயா இருக்கப்போ வாங்கோ!!))
நாங்கள் சுடர் விட்டு எரிய வேண்டும் என்பதற்காக தங்களையே உருக்கிக் கொண்ட மெழுகுவர்த்திகள் இவர்கள். என்ன சொல்வதெண்டே தெரியவில்லை இப் பதிவை வாசிக்கும் போது கண்களில் இருந்து வழிந்தோடும் கண்ணீரைத் தவிர. எப்பொழுது தான் வருமோ அவர்களது ஆசைக் கன்வு நனவாகும் நாள்.
//பெண்ணை ஒரு பிள்ளை பெறும் இயந்திரமாகவும், சமையல் செய்கின்ற இல்லாளாகவும் கருதத் தொடங்கிய எமது சமூக அமைப்பு //
தமிழ் நாடு அளவுக்கு எங்கன்ட இடத்தில இருக்கேல்ல என்டு நினைக்கிறன். அம்மா, மாமிமார், சித்திமார், அம்மம்மாமாரின் கதை கேட்டு மட்டுமல்ல, அப்பா, மாமாமார், பாட்டாமார் (தாத்தாமார்) கதையும் கேட்டு வரைந்த எண்ணம்...
//பெண்களின் சுதந்திரம் எவ்வாறு இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக ‘ஒரு பெண் நள்ளிரவு நேரத்தில் எந்தவிதத் துணையுமின்றித் தனியே யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு நடந்து செல்லலாம்//
உண்மை!!!!!!!!
//பெண் போராளிகளிடையே பல சிந்தனைக் கருத்துக்களை விதைத்து, அவர்களுடன் இருந்து பல வேலைத் திட்டங்களைச் செயற்படுத்திய பெருமை திருமதி அடேல் பாலசிங்கம் அம்மையாரையே (அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார்) சாரும்.//
தலைவருக்கும் கொஞ்சம் கிரடிட் கொடுங்கோ.. 87களில் ஒன்றாக எல்லோரும் காட்டில் இருந்து வளரக் கிடைத்ததும் ஒரு காரணம். அடேல் அவர்களுக்கு எதிர் என்டு நினையாதீங்கோ... அவர் என்றுமே எனக்கு ஒரு மதிப்புக்குரிய பெண்மணி..
//‘அடியே என்ன செய்யுறீங்கள் நீங்கள்?? பொடியங்கள் நல்லா அடிச்சு நிறைய ஆயுதம் எல்லாம் எடுத்துக் கொண்டு முன்னேறுகிறாங்கள், நீங்கள் என்ன செய்யுறீங்கள், அவங்கள் இப்ப நிறைய ஆமியின்ரை பொடி எல்லாம் எடுத்திருக்கிறாங்களாம், படபடவென்று அடியுங்கோ பாப்பம், இந்தச் சண்டையிலை பொடியங்களை விட நாங்கள் நல்லாச் செய்ய வேணும்//
விதுஷா மாமியின் குரல் இன்னும் காதில் ஒலிக்கிறது.. :(( இது விதுஷா மாமியின் பாணி என்டால், துர்கா மாமி, அண்ணாமாருக்கு/பெடியளுக்கு நாங்கள் சான்ஸ் குடுக்ககூடாது பிள்ளையள் என்டு சொல்லுவா... ஒருவர் பெரிய உருவம்... மற்ற ஆள் நுளம்பு சைஸ். எத்தனையோ பேரை இழந்தாலும், இவர்களின் இழப்பு ஏனோ அதிகம் வலியை கொடுக்கிறது...
//பெண் போராளிகளின் உடல் உறுப்புக்களைக் கண்டம் துண்டமாக வெட்டிப் பொதி செய்து அனுப்பித் தங்களின் வக்கிர புத்தியினையும் படையினர் இந்தச் சமர்க்களத்தில் காட்டியிருந்தார்கள் //
எதிரியாயினும் இவ்வாறு செய்வது தவறு.. இப்படி செய்பவனை என்ன செய்தால் தகும்...
ஒரு முறை பாடசாலைக்கு பிரச்சாரத்துக்கு வந்த அண்ணாக்கள் சில கதைகள் சொன்னார்கள்.
1: திருகோணமலையில் ஒரு முகாமுக்கு குடி தண்ணி (ஒரு குளமோ / டாங்கோ ஞாபகமில்லை) எடுக்கும் இடத்திற்குப் போய் நஞ்சு கலந்து 1000 படையினரைக் கொல்வது மிகவும் இலகு, செய்யட்டோ என்டு தலைவரிடம் கேட்டார்களாம். அதற்கு தலைவர் சொன்ன பதில் "சாப்பாட்டையும் தண்ணியையும் யாரும் கவலைப்படாமல் உண்ண வேண்டும்... இத்தகைய கீழ்தரமான செயலைச் செய்ய நினைக்குமளவுக்கா நான் உங்களை எல்லாம் வளத்தனான்? எங்களுக்கு என்டு ஒரு தர்மா சாஸ்திரம் இருக்கிறது. அதை மீறி வெல்லுவதைவிட தோற்கலாம்"
2: ஏதோ முகாமை பிடிக்கும் சண்டைக்கு ஆயத்தமானார்களாம். அங்கு செத்த ஆமிக்கு ஒரு சமாதி இருக்கிறதாம்.. யார் என்டாலும் அதை உடைக்க வேணும் என்டு நினைப்பதை பிழை என்டு சொல்ல இயலாது.. அதற்காக அதைச் சரி என்டும் சொல்ல இயலாது... தலைவருக்கு தெரியாதா அவரின் ஆட்களின் மனநிலை.. சண்டை தொடங்கவே அவரின் விசேட அடையால அட்டை அணிந்த ஒரு குழு செய்த முதல் வேலை, அந்த சமாதியை சுற்றி நின்டு பாதுகாத்தது தான்...
இதை விட ஒரு கதை இருக்கிறது.. உண்மை. சென்னவர் உயிருடன் இல்லை..சொன்னவர் தான் கதையில் நேரடியாக சம்மந்தப்பட்டவர்.
இந்தியா பயிற்சி கொடுத்த நாட்களில் நிறைய குழுக்கள் இருந்தது தானே. அதில் ஒரு குழுவுக்கு சிறிய ரக கனன் ஐ இந்திய அரசாங்கம் கொடுத்தது. அதைக் கொண்டு போக அவர்களிடம் வள்ளமில்லை.. இயக்கத்திடம் வள்ளம் இருந்தது. அதைக்கொண்டு செல்ல இவர்களிடம் அந்த மற்றக் குழு உதவி கேட்டதாம்.. கொண்டு செல்ல உதவும் படி தலைவர் வேலை கொடுத்தவருக்கு சரியான புகைச்சல். காரணம் அவர்களுக்கு கனன் கிடைக்கேல்லை..மற்றது அந்தக் குழு தங்கள் குறிக்கோள்களில் இருந்து மாறத் தொடங்கிவிட்டினம்...
தலைவரிடம் "தம்பி, பேசாம வள்ளத்தை கவுத்து நாங்கள் அதைக் கடத்துவமா" என்டு கேட்டாராம்.. அதற்கு தலைவரின் பதில், "இல்லை. அது பிழை. கொடுத்த வாக்கு தவறுவது மிகவும் பிழை. அவர்கள் மாறப் போயினம் என்டு எனக்கும் தெரியும்.. அது கெதியா நடக்க போகுது, அதனால், அவயிட்ட அதை அடிச்சு பறிப்பம்" என்டு சொல்லுங்கோ. கேட்டவருக்கு, தர்ம சாஸ்திரத்தில் பற்று இருந்தாலும், மக்கள் தேவை என்டு வந்தால் கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாம் என்ற கொள்கை.. மனமில்லாமல், சரி தம்பி என்டு வெளிக்கிட தலைவர் சொன்னது "அண்ணே, நீங்கள் என்னை நம்ப வேண்டும்.. கண்டிப்பாக அதை நாங்கள் எடுப்பம்"..
இருந்தும், அந்த கேட்ட ஆளுக்கு மனமில்லை.. ஆனாலும் கொண்டு போய் குடுத்தார். தலைவர் சொன்ன மாதிரி, அந்த குழு துரோகியாக மாற, இவர்களும் அந்த கனன் ஐ அவர்களுடனான சண்டையில் கைப்பற்றினார்கள்.
எனக்கு இந்த தர்ம சாஸ்திரங்களில் அவ்வளவு பிடிப்பில்லை.. அதுவும் கிருஷ்ணர் எப்படி எல்லாம் அதை மிஸ்யூஸ் செய்து பாண்டவரை வெல்ல வைத்தார் என்டு படித்த பிறகு வந்த கடுப்பு..ஆனாலும் அப்பா சொல்லி தந்ததாலும், இந்த கதைகளைக் கேட்டதாலும், சில விடயங்களில் உறுதியாக இருப்பேன்..
அதில் ஒன்று: இறந்த உடலுக்கு, என் முதுகில் குத்திய துரோகியின் உடல் என்டாலும் அவமரியாதை செய்யாமை... செத்த உடலுக்கு அவமரியாதை செய்வது நாங்கள் லூசர்ஸ் என்டு நாங்களே ஒத்துக்கொள்வதாகும். (Losers க்கு சரியான தமிழ் சொல்லு என்ன? )
அருமையான ஆக்கம்.. உண்மையைத் தான் சொல்லுறன்...
எங்க ஆளையே காணோம்... பிஸீயா...
ஃபிரியா இருக்கப்போ பதிவுகள் எழுதவும்!!!
தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன், அப்படியே இந்தியாவில இருந்து கொண்டே எழுதி முடிச்சிடுங்க...
வாழ்த்துக்கள்..
இனிய கல்யாண வாழ்த்துக்கள் நண்பா :-))
hi
கமல் எங்கே காணாமல் போயிட்டீங்கள்?
pls visit
http://sweetlanka.blogspot.com
பிரபாகரன் முன்னிலையிலே மானபங்கப்படுத்தப் பட்ட இளம் பெண்
http://www.sweetlanka.blogspot.com/
hi
Post a Comment